விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிகுலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் அரசுப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, ஓட்டுநர் சின்னத்தம்பிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாமர்த்தியமாக உடனே பேருந்தை நிறுத்திய சின்னத்தம்பி, பயணிகளை இறக்கிவிட்டுள்ளார். பேருந்து ஓட்டுநரின் இந்த செயல் பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின் ஆட்டோ பிடித்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சின்னத்தம்பி சிகிச்சைப் பெற்றுள்ளார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி, சின்னத்தம்பி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இறக்கும் தருவாயில் கூட பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயல், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் சின்னத்தம்பிக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மேலும் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த மகன் - மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த இளைஞர்களின் நெகிழ்ச்சி சம்பவம்!