திருவள்ளூர் மாவட்டம் புழல் புத்தகரத்தைச் சேர்ந்த பிரேமலதா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவரைக் காதலித்துவந்தார்.
சுதாகரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரைப் பிரிய முயன்று சில நாள்களாகப் பேசாமல் இருந்துவந்துள்ளார். நேற்று அதிகாலை (ஜனவரி 28) பிரேமலதா இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது வீட்டின் பின்புறம் மறைந்திருந்த சுதாகர் ஏன் தம்மிடம் பேசுவதில்லை எனக் கேட்டு பிரேமலதாவின் வயிற்றுப் பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த பிரேமலதாவை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து தகவலறிந்த புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுதாகரைத் தேடிவந்தனர். இந்நிலையில், மாதவரம் வி.எஸ். மணியன் நகரில் மின்சார கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில் தலைமறைவான சுதாகர் தூக்கில் தொங்கியிருப்பதாகத் தெரியவந்தது.
இதனையடுத்து சுதாகரின் சடலத்தைக் கைப்பற்றி காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.