திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் 3231 கன அடி நீர் கொள்ளளவு, 16 மதகுகளை கொண்டது. நிவர் புயல் காரணமாக சுற்றுவட்டாரங்களில் பெய்த மழை, கிருஷ்ணா கால்வாய் நீர், பள்ளிப்பட்டு அணையில் இருந்து வரக்கூடிய கொசஸ்தலை ஆற்றின் நீர் ஆகியவை மூலம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு உயர்ந்து வருகிறது. மேலும், ஆயிரத்து 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
35 அடி உயரம் கொண்ட நீர்த்தேக்கம், தற்போது 31.5 அடி உயரம் வரை நீர் உள்ளது. 35 அடி உயரத்தை தொட்டவுடன் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து விரைவில் உபரி நீர் திறக்கப்படும் என்று செயற் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ் கூறுகையில், "பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அருகில் உள்ள பொதுமக்கள் வந்து பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நீர்த்தேக்கத்தின் மேல் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது" என்றார்.