திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட மேல் அயனம்பாக்கம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் விடுதி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொள்ள இருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் மகளிர் விடுதி கட்டக்கூடாது என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கருப்புக் கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பூவிருந்தவல்லி தாசில்தார் காந்திமதி சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தாசில்தாரை முற்றுகையிட்டும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் தாசில்தார் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து நீண்ட நேர தாமதத்திற்கு பின்பு பூமி பூஜை விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் இது தொடர்பான மனுவை போலீசார் பெற்று கொண்டனர்.
இதையும் படிங்க: 'அரசு அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்க!' - கையிலும் வாயிலும் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு மனு!