தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டம், மருத்துவம், அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய கமிஷனர் ஜெகதீஷ் ஹர்மேனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கூட்டத்தில் ஜெகதீஷ், திருவள்ளூரில் உள்ள நான்கு நகராட்சிகள், பத்து பேரூராட்சிகள், 526 ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா, மேலும் அவர்களுக்குப் போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவக் காப்பீடுகள், பணியில் ஈடுபடுவதற்குத் தேவையான கையுறைகள், காலுறைகள், முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, முறையான ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கேட்டறிந்தார்.
துப்புரவுப் பணியாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தனியார், அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி யாராவது இறந்துபோனால் நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சியாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இனி ஒரு இறப்பு ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் துப்புரவுத் தொழிலாளர்கள் அரசின் உரிய அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'எங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்' - மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை