தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய ஸ்ரீ பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் கோயிலாகும். இக்கோயில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று, ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மங்கள வாத்தியங்களுடன் ராஜ வீதிகளில் வலம் வந்து, சிவகங்கை குளத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
இதன் பின்னர் சுவாமிகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்து, அங்கு சுவாமி அம்பாள் கோயிலுக்கு உள்ளே வந்து, கதவைச் சாத்திக் கொண்டு நடராஜப் பெருமானைக் கோபித்துக் கொண்டு உள்ளே வரவிடாமல் தடுத்து விடுகிறார். இதனை அடுத்து, சுந்தரர் இரு தரப்பிலும் சமாதானம் செய்து, சுவாமியைக் கோயிலுக்குள் அழைத்து வரும் வைபவம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, நடராஜப் பெருமான் கூடியிருந்த பக்தர்கள் மேல் நெல்மணிகளை மழைபோல் தூவி ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த செந்தலை கிராமத்தில் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஶ்ரீ நடராஜர் சிறப்பு அலங்காரத்துடன், சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் பரிகார மூர்த்திகளுடன் ஆருத்ரா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து நடராஜருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் விரதம் இருந்து, நடராஜருக்கு வில்வ இலை வைத்து பூஜை செய்தனர். மேலும், தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகிய பாடல்கள் பாடப்பட்டு, கோபுர தரிசனம் மேற்கொண்டு நான்குமாட வீதியுலா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆருத்ரா தரிசனம்: மயிலாடுதுறையில் எட்டரை அடி உயரமுள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்!