திருவள்ளூர்: திருத்தணியில் பக்தர்களின் வசதிக்காக சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (ஜூலை 2) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோயில் வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஒன்பது ஏக்கர் கோயில் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறை மூலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு 500 கோடியை தாண்டும்.
திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான முருகன் கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் இருந்தது. இதுகுறித்த முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். கோயிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்டிய பிறகு அந்த ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய படிக்கட்டுகள் இன்னும் அமைக்கப்படவில்லை. அப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில் அடிவாரத்தில் உள்ள குளம் 9 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதனை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
கோயில் வளாகத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
கோயில் அருகே உள்ள இரண்டு குளங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை சீர் அமைக்க உள்ளோம்.
கோயிலில் வெள்ளித்தேர், தங்கத்தேர் உள்ளது. இரண்டு தேர்களும் கடந்த 8 ஆண்டுகளாக பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து ஓட வைக்க இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்தபடி முதியவர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும். அதற்காக கட்டமைப்பு வசதிகள், இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆய்வின் முடிவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவுசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வோம்.
கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 புதிய பூங்காக்கள்!