திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரு நிலைகளில் உள்ள ஐந்து அளவுகளில் நாளொன்றுக்கு 5840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நிலக்கரி கையாளுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் அடையாள அட்டை உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இரு நிலை நுழைவாயிலின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மற்றொரு தரப்பு தொழிலாளர்கள் கையில் சட்டி ஏந்தி ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.