திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே புதியதாக அமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏற்கனவே செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன.
எனினும், சென்னை குடிநீருக்காக ஆந்திராவில் இருந்து கிடைக்கும் கிருஷ்ணா நதிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த 5ஆவது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 5 வதாக புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2012ஆம் ஆண்டு 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசு வெளியிட்டது.
இதற்காக அப்பகுதியில் 840 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் சுமார் 600 ஏக்கர் புறம்போக்கு மற்றும் வனப்பகுதி என மொத்தம் 1485 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தப்பட்டன.
2013ஆம் ஆண்டு விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை அழித்து திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013 செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அடிக்கல் நாட்டி வைத்து இந்த பணிகளை தொடங்கிவைத்தார். இது தற்போது முடிவடைந்தது. இந்த நீர்த்தேக்கத்தினை தமிழ்நாட்டிற்கு வரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கவுள்ளார்.