தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், 18சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேணுகோபால், பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து சரத்குமார்பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், 'காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிடவற்றைத் தீர்க்க மத்தியில் அங்கம் வகித்தால்தான் மாநிலத்துக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்காக அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்' என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் 'எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி வருகிறார். ஆனால், சந்தர்ப்பவாதம் எங்கு இருக்கிறது என்றால்,உலகம் அறியாத மிகப்பெரிய ஊழல் என்ற சாதனையைப் படைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம்தான். காற்றலைகளை காசாக்க முடியும் என்று யாருமே கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். இதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ் ஆட்சிதான் என குற்றஞ்சாட்டிப் பேசினார்.
இந்தப் பிரசாரத்தில் அமைச்சர் பெஞ்சமின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்துகொண்டனர்.