திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (55). இவர் நேற்று (அக்டோபர் 6) மதியம் தனது வீட்டைப் பூட்டிவிட்டு கடைத் தெருவிற்குச் சென்றிருந்தார்.
அப்போது இரண்டு பேர் சுப்பிரமணி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாயைத் திருடிக் கொண்டு வெளியே வந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் அந்த நபர்களை விரட்டிச் சென்றனர்.
இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபர் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பெங்களூருவைச் சேர்ந்த கோபி மகன் பிரசாத் (21) என்பதும் இவர் கடந்த ஒன்றரை மாதமாக சோளிங்கர் அடுத்த பிலாஞ்சி என்ற கிராமத்தில் தாத்தா வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
மேலும், பிரசாத்திடமிருந்த, 15 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் பறிமுதல்செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நகையுடன் தப்பியோடிய பிரசாத்தின் நண்பரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணப்பை திருட்டு - மூன்று பெண்கள் கைது