திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் டில்லிபாபு (17). இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தற்போது பேரம்பாக்கம் அருகே மப்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பிச்சிவாக்கம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில், டில்லிபாபு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் பிச்சிவாக்கம் தடுப்பணையில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது டில்லிபாபு தடுப்பணையின் ஆழமாக பகுதிக்குச் சென்ற போது, திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட உடனிருந்த நண்பர்கள், அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர்களால் இயலவில்லை என்பதால், அலறி கூச்சலிட்டுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத் துறைக்கும், கடம்புத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் நீரில் மூழ்கிய டில்லிபாபுவை தேடி வந்தனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டில்லிபாபுவின் பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதி கிராம மக்களும் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் போரட்டத்திற்குப் பிறகு, இரவு 7.30 மணியளவில் தடுப்பணையின் ஒரு பகுதியில் இறந்த நிலையில் கிடந்த டில்லிபாபுவின் உடல் மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிப்பதற்காகச் சென்ற 17 வயது வாலிபர் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.