திருவள்ளுவர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட மணவூரில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப்பகுதியில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஆக.24) மணவூர் ரயில் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த திருவாலங்காடு காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மணவூரைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி, இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சென்னைக்குச்சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று(ஆக.23) இரவு மணவூர் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்குச்சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் 70 வயது மூதாட்டியினை வன்புணர்வு செய்து, கொலை செய்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இனி இந்தப்பகுதியில் இதுபோல சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை ரயில் முன்பு தள்ளிக்கொலை செய்த நபர் கைது