திருவள்ளூர்: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் தேஜாராம் மகன் சேஷாராம் (25). நகை மொத்த வியாபாரியான இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளுக்கு சென்று, தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
அப்போது, 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 100 கிராம் தங்க நகைகளை விற்பனை செய்து விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி சேஷாராம் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர், திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலை செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொழுவூர் சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் சேஷாராமை மடக்கி பலமாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது இடது கையிலும் கத்தியால் வெட்டிவிட்டு, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு கிலோ தங்க நகை மற்றும் விற்பனை செய்த ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்கள், அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து உள்ளனர்.
இதனை அடுத்து, சேஷாராம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் செவ்வாய்பேட்டை அடுத்த வெள்ளக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்த அருண் மகன் சரவணன் (21), சேகர் மகன் ஆதி (18), என்பது தெரியவந்தது. மேலும் முக்கிய கூட்டாளிகள் 4 பேர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசாரின் தேடுதல் வேட்டையில், கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த எழிலரசன் (எ) சுனில் பிடிபட்டார்.
இதையடுத்து போலீசார் சரவணன், ஆதி மற்றும் எழிலரசன் ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் இன்னும் சிக்காததால், காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் சிறப்பு படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டால் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீசார் கைது செய்த மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தேனி அருகே வழக்கறிஞர் என கூறி பண மோசடி செய்த நபர் கைது!