சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு, சென்னையின் மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வருகிறார், மஞ்சு (35). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தையின் பாதுகாப்பில் ஆடை வடிவமைப்பு தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்து வருகிறார்.
நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், ''சென்னை 28 - பாகம் 2'' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா. இவர், மஞ்சுவிடம் வாடிக்கையாளராக நன்றாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு, மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
லாவண்யாஸ்ரீ விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்காத விஷயத்தை கேள்விப்பட்ட அபர்ணா அபிநய், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் மகள் லாவண்யாஸ்ரீக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என மஞ்சுவிடம் கூறியிருக்கிறார்.
முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவச் சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார். இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம், 5 லட்சம் ரூபாயை அவர் கூறியபடி அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார்.
பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா அபிநய், ஐந்து நாட்கள் கழித்து வாட்ஸ்அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அந்த சான்றிதழை எடுத்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு சென்று, மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றபோது, போலியான சான்றிதழ் என கல்லூரி நிர்வாகம் மஞ்சுவிடம் கூறியுள்ளது.
அப்போது, அதிர்ச்சியடைந்து தான் கொடுத்த பணத்தை அபர்ணாவிடம் திரும்பக் கேட்டுள்ளார். தொடர்ந்து மஞ்சு, அபர்ணா வைத்திருக்கும் நவீன ஆடை விற்பனைக் கடையில் சென்று கேட்டுள்ளார். அப்போது 5 லட்சம் ரூபாய் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்குதான் தான் அனுப்பியதாகவும், தனது நண்பரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் கூறி அலைக்கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் அபர்ணா கடையை மூடிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
இதனால் வேறு வழியின்றி மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அபர்ணா அபிநய் மற்றும் நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் காவல் துறையினர், அவரை கைது செய்ய தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.50 கோடி மோசடி - பாதிக்கப்பட்டோர் மறியல்!