திருவள்ளூர் : கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி பெரியவீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்கு ஜன.3ஆம் தேதி தொடர்பு கொண்டார்.
அப்போது அவர், “நானும் எனது நண்பர் சங்கர் (34) என்பவரும் இரு சக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் வைத்திருந்தோம். அப்போது எங்களுக்கு அறிமுகமான மணலி அரி என்பவர் தனது நண்பருடன் எங்களை கட்டிப் போட்டு பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தனர்.
துப்பாக்கி முனையில் பணம் பறிப்பு
அதன்பின்னரும் சங்கரை மிரட்டி அவரது தந்தை மற்றும் மனைவியிடம் இருந்து கூகுள் பே மூலம் பணம் பறித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணைக்காவல் கண்காணிப்பாளர் ரித்து முன்னிலையில் கும்மிடிப்பூண்டி வட்ட காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தக் குற்றத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான மோகன்சந்த் மற்றும் சரண் (எ) விக்கி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
தனிப் படை அமைப்பு
உடனடியாக கன்லூர் கிராமத்திற்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் மோகன்சந்த் மற்றும் சரண் (எ) விக்கி ஆகியோரை பிடித்து விசாரணை செய்தததில் அவர்கள் சில தகவல்களை அளித்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் கவரப்பேட்டை சத்தியவேடு சாலையில் அமைந்துள்ள HP பெட்ரோல் பங்க் பின்புறமுள்ள பாழடைந்த கட்டடத்தில் பதுங்கியிருந்த 7 பேர் சிக்கினர்.
அவர்கள் பதுங்கியிருந்த குடோன் கத்தி, அரிவாள் ஆகியவற்றை தயாரிக்கும் இரும்பு பட்டறையாக பயன்படுத்திய இருந்தது தெரியவந்துள்ளது. அந்த பட்டறையில் இருந்து, பட்டா கத்திகள் 7 , டம்மி கைத்துப்பாக்கி 1, மோட்டார் சைக்கிள் 1, வெல்டிங் மிஷின் 1 மற்றும் கஞ்சா சுமார் 10 கிலோ ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கொத்தாக தூக்கிய போலீஸ்
இந்த வழக்கில் இதுவரை கண்லூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்சந்த் (28 ), சரண் (எ) விக்கி ( 23), தங்கராஜ் ( 25 ), சங்கர் (22 ), மணி ( எ ) பொட்டுமணி (22), மணி ( எ ) போண்டாமணி ( 28 ), ஸ்ரீராம் ( எ ) கொக்கி (27), தளபதி ( 29 ) மணிகண்டன் ( எ ) குரங்குமணி ( எ ) டிக்டாக் மணி ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர் .
மேலும் அங்கிருந்து தப்பி ஓடி சென்றவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இந்தக் குற்றச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மணலி பகுதியைச் சேர்ந்த அரி என்பவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
எச்சரிக்கை
தொடர்ந்து, இவ்வழக்கின் புலன் விசாரணையில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்கள் மீதும் சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க: Exclusive: செங்கல்பட்டு ரவுடிகளுக்கு மாவட்ட எஸ்பி எச்சரிக்கை