திருவள்ளூர் மாவட்டம் பூண்டி கிராமத்தில் 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலராக அண்மையில் பதவியேற்றவர், விஜி. இவரது உறவினர் ஒருவரின் இறப்பு காரணமாக, நேற்று பகல் 11.30 மணியளவில் தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தர்பூசணியுடன் மறைத்து வைக்கப்பட்ட செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது!