தமிழ்நாட்டில் நவம்பர் ஆறாம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் ஆறாம் தேதிவரை திருச்செந்தூர் கோயில் வரையிலாக வேல் யாத்திரை நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்தார். வேல் யாத்திரை நடத்தினால் மதக்கலவரம் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இருப்பினும் இன்று(நவ.6) வேல் யாத்திரை தொடக்க விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜகவினர் திருத்தணியில் குவிந்தனர். பாஜகவினரின் வேல் யாத்திரையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்களில் 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 12 மணிக்கு எல்.முருகன் மலைக் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்கினார். அரசின் தடையை மீறி எல். முருகன் சென்னை பைபாஸ் சாலைக்கு வந்து வேல் யாத்திரையை தொடங்கினார். அவருடன் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேல் யாத்திரை வந்தது. அப்போது செய்தியாளர்களிடம் எல். முருகன், "இந்து மதத்திற்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவே வேல் யாத்திரையை நடத்துகிறோம். திருத்தணியில் இன்று தொடங்கிய வேல் யாத்திரை டிசம்பர் ஆறாம் தேதி திருச்செந்தூரில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் ஆட்சி மலரும்" என்றார்.
பின்னர் அரசின் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய எல். முருகன் உள்பட 700 பேரை காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கு மின்சாரம் இல்லை என்று பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணியில் பாஜகவினரின் வேல் யாத்திரையால் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம்