திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மதுபான பார்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து கூடுதல் கமிஷனர் தினகரன், தனிப்படை அமைத்து மதுபான பார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.
தனிப்படை காவல்துறையினர் பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, குன்றத்தூர், போரூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் மதுபான பார்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் அனைத்து பார்களிலும் கள்ளச்சந்தையில் மது பானங்கள் 24 மணி நேரமும் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மதுபானங்கள் விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் ரூ. 2லட்சத்து 30 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களில் அவர்களை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:மளிகை கடையில் போதை பொருட்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை