திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே நொச்சிக் குப்பம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் அக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடையின் பாதிப்புகள்
பள்ளி, கோயில், திருமண மண்டபம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி என அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பொது வழியின் அருகே அரசு மதுபானக் கடை அமைந்துள்ளதால் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகவும், வழிப்பறி, விபத்து போன்றவை தொடர்கதை ஆகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் முன்னதாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பல முறை ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனைவரிடமும் முறையிட்டும் பயன் இல்லாததால் விரக்தியில் மதுபானக் கடையை மூட வலியுறுத்தவதாக கோஷங்கள் எழுப்பியவாறு மக்கள் மதுபானக் கடையை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல துணை வட்டாட்சியர் ரவி, ஆய்வாளர் அய்யனாரப்பன், உதவி ஆய்வாளர் ராஜு ஆகியோர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்து தற்போது கலைந்து செல்வதாகவும் தீர்வு கிடைக்காவிட்டால், மதுபானக் கடையை மூடும் வரை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அப்பகுதி பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக 100 நாள் ஆட்சி சாதனை அல்ல, சோதனை; குற்றச்சாட்டுகளை அடுக்கும் எடப்பாடி பழனிசாமி