சென்னை ராஜமங்கலம், அம்பேத்கர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கில்பர்ட் (38). இவர் வீட்டில் இருந்தபடியே புகைப்படக் கலைஞராக பணியாற்றிவருகிறார். இவரது வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புனரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இதில், ஜாக்கியை பயன்படுத்தி கட்டடம் மூன்று அடிகள் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) கழிவறை புனரமைக்கும் பணியில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். மாலை ஐந்து மணியளவில் திடீரென கட்டட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் ஏழுமலை (35) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தோணிசாமி (41) என்பவரது வலது கையில் நான்கு விரல்கள் சிதைந்தன. கதிர்வேல (60) தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அம்சவல்லி (30) என்பவர் அதிர்ச்சியில் மயங்கினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு செம்பியம், வில்லிவாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்கள் வந்தன. இதையடுத்து, நால்வரும் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஏழுமலை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து ராஜமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.