திருவள்ளூர்: ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அணைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பிச்சாட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
அணையின் முழுக் கொள்ளளவான 1.853 டிஎம்சியில் தற்போது 1.671 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்புக் கருதி ஆரணி ஆற்றில் விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
மேலும் அணையைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 4.2 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்தால் ஆரணி ஆற்றில் கூடுதலாக உபரி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரணி ஆற்றுப்பகுதியில் இருந்து வரும் நீர் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் இருக்கும் ஊத்துக்கோட்டை, அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், பாலவாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, பழவேற்காடு ஆகியப்பகுதிகள் வழியாக செல்கிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஆற்றுப்பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது - கமல் பாராட்டு