திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே உள்ள மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன். இவர் நேற்று முன்தினம் (ஆக.30) சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.
இருப்பினும் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு தான் இந்த கொலைக்கு மூல காரணம் என்றும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ஜெகன் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நேற்று (ஆக.31) உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில், அதே மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (26) என்ற இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து கட்டட வேலை பார்த்து வந்தார். பாஜக பிரமுகர் ஜெகன் கொலை வழக்கில் காவல் துறையினர் தன்னையும் சேர்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ரஞ்சித் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.. நெல்லையில் தொடரும் படுகொலைகள்!
குறிப்பாக ஜெகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்படும் திமுக பிரமுகர் பிரபுவுடன் தற்போது தற்கொலை செய்து கொண்ட ரஞ்சித் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பிரபு செல்லும் இடங்களுக்கு பெரும்பாலும் ரஞ்சித்தும் அவருடன் சென்று வந்துள்ளார். ஆகையால் எங்கே கொலை வழக்கில் காவல் துறையினர் தம்மையும் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
அதே போல் கொலையுண்ட ஜெகன் உறவினர்களும் ரஞ்சித்துக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக அவரது உடலை வெளியே எடுத்து வர விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ரஞ்சித் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? எனவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் கொலை வழக்கில் வெளிவந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது