திருநெல்வேலி: விகே.புரம் அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணிற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை WhatsApp-ல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த மர்ம நபர் ஆபாச வீடியோ கால் செய்யுமாறு வற்புறுத்தி, தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாக அந்த இளம்பெண் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் உத்திரவிட்டதின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தென்காசி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த பிரதீப்(22), என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சைபர் கிரைம் காவல்துறையினர் பிரதீப்பை கைது செய்து அவரிடமிருந்து ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் 4 சிம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பிரதீப் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருபவர் என்றும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் இளம் பெண்களின் புகைப்படத்தை தனியாக எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி, அவர்களை தனது பாலியல் ஆசைக்கு இணங்கும் படியும், ஆபாச வீடியோ அழைப்புகளை செய்யும் படியும் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்ததும் தெரிய வந்ததுள்ளது.
இதுபோன்று பல இளம்பெண்களை பிரதீப் மிரட்டியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளிக்க வேண்டும், அப்படி அளித்தால் பிரதீப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக வலைத்தளத்தில் Privacy Settings Enable செய்து வைக்குமாறும், முன்பின் தெரியாத நபர்கள் சமூக வலைத்தளங்களில் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்ப வேண்டாம் என்றும் ஆபாச மிரட்டல்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துணிவு பட பாணியில் பட்டப்பகலில் வங்கி கொள்ளை முயற்சி.. திண்டுக்கல் இளைஞரை கைது செய்த காவல்துறை!