நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, மகாராஜா நகர் பகுதியைச் சேர்ந்த விக்டர் என்பவரின் மகன் சல்வேஷஸ் (வயது 24). இவர் இன்று (நவ.09) பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென விபத்தில் சிக்கி, சென்டர் மீடியனில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் சல்வேஷஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சல்வேஷஸின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து நடைபெற்றதா அல்லது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் உரசி விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சல்வேஷஸ் கடந்த மாதம்தான் புதிய இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவ.10) நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதையொட்டி அவரை வரவேற்று நெல்லை மாவட்ட அதிமுகவினர் ரெட்டியார்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் ஆளுயர அதிமுக கொடி கம்பங்களை நட்டுள்ளனர்.
சாலையின் இருபுறமும் இந்தக் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில், வெளிச்சம் மங்கும் மாலை நேரம் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க இடையூறு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை யாரும் அமைக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கொடிக்கம்பங்களால்தான் சல்வேஷஸ் விபத்தில் சிக்கினாரா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இருசக்கர வாகனம் வாங்கிய ஒரே மாதத்தில் வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு சென்னை, பள்ளிக்கரணையில் சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.