உலக உணவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த பாரம்பரிய உணவு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்து பார்வையிட்டார். நிகழ்வில், அரசு ஊழியர்களுக்கு கலப்பட உணவினை கண்டறியும் முறை குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு கிடைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்தான உணவு குறித்து பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்துகொண்டு பாரம்பரிய உணவு கண்காட்சியைத் தொடங்கிவைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் கம்பு, சோளம் உள்ளிட்ட நவதானியங்கள், நவதானியங்களில் செய்யப்பட்ட உணவு, பருப்பு வகைகள், காய்கறிகளில் செய்யப்பட்ட உணவு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரசு ஊழியர்களுக்குப் பாராம்பரிய உணவு குறித்தும், கலப்படப் பொருள்களைக் கண்டறிவது குறித்தும் செயல் விளக்கத்துடன் செய்து காட்டப்பட்டது. இந்தக் கண்காட்சியை சத்துணவுப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் பார்வையிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: நடிகை குட்டி பத்மினி மீது நில மோசடி புகார்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு!