திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி பகவதி. இவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருந்ததாவது, “ராதாபுரம் தாலுகா தெற்கு கருங்குளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு ராதாபுரம் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வரும். இந்த கால்வாயை நெல்லை பாராளுமன்ற திமுக உறுப்பினர் ஞானதிரவியம் , அவரது ஆதரவாளர்கள் ஜேசிபியை கொண்டு மூடிவிட்டார்கள்.
இந்த கால்வாய் சுமார் 7 மீட்டர் அகலமும் சுமார் 300 மீட்டர் நீளமும் உள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாயாகும். இந்த கால்வாயை ஞானதிரவியம் எம்பி, அவரது மகன்கள், ஆதரவாளர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஆக்கிரமித்து, வேலிபோட்டு தங்களது நிலத்தோடு சேர்த்து வைத்துள்ளார்கள்.
அதை மீட்டு தரவேண்டும். இது குறித்து காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் புகார் செய்தோம். இதனால், ஆத்திரமடைந்த நெல்லை பாராளுமன்ற திமுக உறுப்பினர் ஞானதிரவியம், அவரது மகன்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் சேர்ந்து எங்களது குடும்பத்தினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஞானதிரவியம் எம்பி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன்னும் இரண்டு நாள்களில் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் வருவதாக தெரிகிறது.
ஞானதிரவியம் எம்பி குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கால்வாயை மீட்டுத் தந்து, தண்ணீர் வரும் கால்வாயை அடைத்து வைத்த ஞானதிரவியம் எம்பி, அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரவுடி கொலை வழக்கில் இரண்டு பேர் கைது: ஏழு பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்!