தென்காசி : கடையநல்லூர் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்தவர் மைதீன் பீவி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. பின்னர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மைதீன் பீவியும் ,கோபிகிருஷ்ணனும் வாரிசு இல்லாததால் மைதீன் பீவியின் சொந்த ஊரான வீரசிகாமணிக்கு குடிபெயர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் 26ஆம் தேதி அன்று மைதீன் பீவி குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மாடி படியில் தவறி விழுந்து இறந்ததாக கோபிகிருஷ்ணன் மைதீன்பீவியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இறுதி சடங்குகள் முடித்து மைதீன்பீவியின் சடலத்தை வீரசிகாமணியில் உள்ள கோபி கிருஷ்ணனுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் புதைத்துத்துள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மைதீன் பீவியின் தங்கை பீர்பாத்திமா கோபி கிருஷ்ணன் பண்ணை தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதில், சந்தேகமடைந்த பீர் பாத்திமா தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் மைதீன் பீவியின் உடலை தோண்டி எடுத்து இன்று உடற்கூறு ஆய்வு செய்யபட்டு வருகிறது. 11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மைதீன் பீவியின் உடலை இன்று தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்படுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.