திருநெல்வேலி: மாற்றுத்திறனாளியிடம் இருந்து 13 சவரன் நகைகளையும், கடையில் பணியாற்றியதற்கான ஊதியத்தையும் வழங்காமல் மோசடி செய்த பாஜக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவரின் மனைவி நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை - பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர், சண்முகம். இவர் உடல் ஊனமுற்றவர் ஆவார். இவரது மனைவி பேச்சியம்மாள். சண்முகம் கடந்த 2008ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள பாஜக நிர்வாகியான டி.வி.சுரேஷ் என்பவரது டைல்ஸ் கடையில் சுமார் 8 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த 8 மாதங்களுக்கான சம்பளத்தை அந்த கடையின் உரிமையாளர் டி.வி. சுரேஷ் பல நாட்களாக வழங்காமல் இருந்து வந்துள்ளார்.
அது மட்டுமின்றி அந்த கடையில் வேலை பார்த்த நேரத்தில், பணத்தேவை ஏற்பட்டதால் உரிமையாளரின் உதவியை நாடியுள்ளனர். அப்போது சண்முகத்தின் மனைவி பேச்சியம்மாளின் 13 சவரன் தங்க நகையை வங்கியில் அடகு வைத்து தருவதாக கூறி வாங்கிச் சென்று அதற்கான பணமாக ரூ.25 ஆயிரத்தை டி.வி.சுரேஷ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தேவர்' என அழைக்கும் அரசாணை தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இதனைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின் வட்டியுடன் பணத்தை கொடுத்துவிட்டு, நகையை பேச்சியம்மாள் திருப்பித் தருமாறு கேட்டபோது நகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரனிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பேச்சியம்மாள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். டி.வி.சுரேஷ், பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மோசடி புகாரில் சிக்கி வருகின்றனர். பணம், நகை மோசடியில் ஈடுபடுவதாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டம், பணகுடி அருகே வெளிநாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரை பாஜக நிர்வாகி மிரட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில் அடுத்தடுத்த சம்பவமாக தற்போது மேலும் ஒரு பஜார் நிர்வாகி மீது பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதோடு பொது மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.