ETV Bharat / state

தனி ஒருத்தி சங்கரி: குப்பை மேட்டை கடல்போல் மாற்றிய சிங்கப் பெண்! - alangari amman pond

சிவந்திபுரம் கிராமத்தில் இருக்கும் நூற்றாண்டு பழமையான அலங்காரி அம்மன் குளத்தை யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் தனி ஒரு ஆளாகக் களமிறங்கி சீரமைத்துள்ளார் இயற்கை மருத்துவர் சங்கரி.

special story
special story
author img

By

Published : Jul 21, 2021, 3:46 PM IST

Updated : Jul 27, 2021, 6:28 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரி. இயற்கை மருத்துவரான இவர் அதே பகுதியில் கிளினிக் அமைத்து இயற்கை மருத்துவம் பார்த்துவருகிறார். இயற்கை மருத்துவர் என்பதாலோ என்னவோ இயற்கையைப் பாதுகாக்கத் தனி ஒருவராகக் களமிறங்கியுள்ளார்.

நூற்றாண்டு பழமைவாய்ந்த குளம்

சிவந்திபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் நூற்றாண்டு பழமைவாய்ந்த அலங்காரி அம்மன் குளம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கோயில் குளமாக இருந்த இந்தக் குளம் தற்போது அம்பாசமுத்திரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அலங்காரி அம்மன் குளம் தற்போது
அலங்காரி அம்மன் குளம் தற்போது

இந்தக் குளத்திற்கு அணைகளில் இருந்தோ அல்லது பிற நீர்நிலைகளில் இருந்தோ நீர் எதுவும் வராது. மழை வந்தால்தான் குளத்திற்குத் தண்ணீர். ஊர் பொதுமக்களும், நகராட்சி நிர்வாகமும் முறையாக குளத்தைப் பராமரிக்காமல் இருந்துள்ளனர். இதனால் குளத்தில் நான்கு கரைகளிலும் செடி கொடிகள் வளர்ந்து குளத்தின் அடையாளமே மறைந்துபோனது.

குளத்தைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளைக் கொட்டும் குப்பைக் கூளமாக இந்தக் குளத்தை மாற்றியுள்ளனர்.

மருத்துவர் சங்கரி குளத்தை  சீரமைக்கும் பணி
மருத்துவர் சங்கரி குளத்தை சீரமைக்கும் பணி

குளத்தின் நான்கு புறமும் எங்குப் பார்த்தாலும் குப்பை மேடாகக் காட்சி அளித்தது. இதில் குளத்தின் நடுவே அமலிச் செடிகளும் படர்ந்து காணப்பட்டன. இந்தச் சூழலில்தான், நாள்தோறும் வேலைக்குச் செல்வதற்காக இந்தக் குளத்தை கடந்துசென்ற மருத்துவர் சங்கரி குளத்தின் அவலநிலையை மாற்ற முடிவுசெய்தார்.

ஜேசிபி இயந்திரம் கொண்டு குப்பைகள் அகற்றப்படுகிறது
ஜேசிபி இயந்திரம் கொண்டு குப்பைகள் அகற்றப்படுகிறது

குளத்தைப் பராமரிக்க 3 திட்டம்

அதன்படி 2016ஆம் ஆண்டு தனி ஒருவராகக் களமிறங்கிய இயற்கை மருத்துவர் சங்கரி, குளத்தைப் பராமரிக்க மூன்று கட்ட திட்டங்களை வடிவமைத்தார்.

முதல்கட்டமாக குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்க பள்ளி கல்லூரி மாணவர்களைக் கொண்டு அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போதுதான் குப்பைகளை வெளியேற்ற ஊராட்சி சார்பில் போதிய உதவி செய்யவில்லை என்பது தெரியவந்தது.

பள்ளி மாணவிகளுடன் சங்கரி
பள்ளி மாணவிகளுடன் சங்கரி

இந்தப் பிரச்சினையைக் களைய குடியிருப்பின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைத்தொட்டியை வாங்கிவைத்தார். இதன் பலனாக குளத்தில் குப்பை கொட்டுவது குறைந்துவந்தது. இருப்பினும் சிலர் குளத்தில் குப்பை கொட்டினர்.

தனி ஒருத்தி சங்கரி: குப்பை மேட்டை கடல்போல் மாற்றிய சிங்கப் பெண்!

இதனால் தமது இலக்கிற்குத் தடை வந்துவிடக் கூடாது எனக் குளத்தை ஆக்கிரமித்திருந்த அனைத்துக் குப்பைகளையும் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம்செய்தார். மேலும் மாணவர்களையும் தன்னுடைய சமூகப் பணியில் ஈடுபடுத்தினார். குளத்தின் நான்கு கரைகளையும் பலப்படுத்தினார்.

இதைக் கண்ட சிவந்திபுரம் ஊராட்சி அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்கரிக்கு உறுதுணையாக இருந்தனர். இரண்டாம் கட்டமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு குளத்தை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

குளத்தின் நீர் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் மாசடைந்திருப்பது தெரிந்தது. சோர்ந்துவிடாமல் இந்தத் தடையையும் களைய மூன்றாம் கட்டமாக குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை எடுத்தார்.

5 ஆண்டு கால முயற்சி

இவை அனைத்தையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவர் சங்கரி தனி ஒருவராக நின்று சாதித்துக் காட்டியுள்ளார். சங்கரி எடுத்த பெருமுயற்சியால் குப்பை மேடாகக் காட்சியளித்த அலங்காரி அம்மன் குளம் தற்போது நான்கு புறமும் தண்ணீர் ததும்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

பொதுவாக இதுபோன்று சமூக சேவைகளில் தன்னார்வலர்கள் பலர் தாமாகவே முன்வந்து உதவி செய்வார்கள். ஆனால் சங்கரி விஷயத்தில் அது பொய்த்தது. இருப்பினும் யார் உதவியையும் எதிர்பார்க்காமல் தான் மருத்துவம் பார்த்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குளத்தைப் பராமரிக்கச் செலவு செய்துள்ளார்.

இதுவரை லட்சக்கணக்கில் செலவுசெய்துள்ள சங்கரி அது குறித்து கணக்கு எதுவும் தான் வைத்துக் கொள்ளவில்லை என்று வெகுளியாகச் சொல்கிறார்.

குளத்திற்கு விமோசனம்

இது குறித்து சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் இக்கி நம்மிடம் கூறுகையில், "சங்கரி பொண்ணு இந்தக் குளத்தைப் பராமரிப்பதைக் கேள்விப்பட்டு சந்தோஷம் அடைந்தோம். இந்தக் குளத்தில் முன்பு அமலைச் செடிகள் படர்ந்து சுத்தம் இல்லாமல் இருந்தன.

சங்கரி எடுத்த முயற்சியால் குளம் தற்போது பராமரிக்கப்பட்டு தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் அளவுக்கு குளத்தைப் பராமரித்து கொடுத்துள்ளார். அவர் மூலம் இந்தக் குளத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது" என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

தூய்மைப் பணியாளர் செல்வம் பேசுகையில், "இந்தக் குளத்தில் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளைக் கொட்டிவந்தனர். சங்கரி அம்மா எடுத்த விடாமுயற்சியால் தற்போது குளம் பராமரிக்கப்பட்டுஉள்ளது. இருப்பினும் பொதுமக்களிடம் ஒரு விழிப்புணர்வு வேண்டும், தொடர்ந்து பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிவருகின்றனர்.

குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க அவர் ஆங்காங்கே தன் சொந்த செலவில் குப்பைத் தொட்டிகளை அமைத்துக் கொடுத்தார். இந்தக் குளத்திற்காக அதிகம் செலவு செய்துள்ளார்.

எங்களுக்குக்கூட பலமுறை சம்பளம் கொடுத்து வேலை வாங்கியுள்ளார். சங்கரி அம்மா எடுத்த முயற்சியால் இந்தக் குளம் ரொம்ப ரொம்ப சுத்தமாக மாறியுள்ளது. தொடர்ந்து அவர் குளத்தைப் பராமரிக்க வேண்டும்" என்று அன்பு கட்டளை போட்டார்.

ஓயாத பணி

சங்கரி பல தடைகளைத் தாண்டி குளத்தைச் சீரமைத்துக் கொடுத்தாலும் ஊர் பொதுமக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையே இருக்கிறது. தொடர்ந்து குளத்தின் கரைகளில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதைக் கண்டு துவண்டுவிடாமல் அடுத்தகட்ட முயற்சியாக குளத்தின் நான்கு கரைகளிலும் வேலி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் சாதனைப் பெண் சங்கரி.

இதையும் படிங்க: 45 வருடங்கள்... அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மக்கள்!

Last Updated : Jul 27, 2021, 6:28 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.