திருநெல்வேலி: மணிமுத்தாறு அருகே உள்ள வைராவி குளம் பகுதியை சேர்ந்தவர், வள்ளியம்மை(70). கணவனை இழந்த மூதாட்டியான இவருக்கு சொந்தமாக வைராவி பகுதியில் விவசாய நிலம் உள்ளதாக தெரிகிறது. மூதாட்டி தனது மகள் அரசு வேலை பெறுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த நபர்கள் தற்போது தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதோடு நிலத்தை எழுதி தர வற்புறுத்துவதாக மூதாட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த 'மக்கள் குறைதீர்க்கும் நாள்' கூட்டத்தில் தனது பிரச்னை குறித்து மனு அளிப்பதற்காக வள்ளியம்மை வந்தார். ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவிட்டு மனு வாங்கும் அரங்கிற்கு வெளியே வந்தபோது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி மூதாட்டி வள்ளியம்மை தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.
அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் பாளையங்கோட்டை போலீசார் தற்கொலை முயற்சி செய்தது குறித்து மூதாட்டி வள்ளியம்மையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வயதான காலத்தில் தேவை இல்லாமல் இதுபோன்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்யலாமா? என போலீசார் கேட்டுள்ளனர்.
அதற்கு வள்ளியம்மை மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த பெண் ஒருவரை தொடர்புகொண்ட போது, அவர்தான் 'வெறும் மனுவை மட்டும் கொடுத்தால், வேலை நடக்காது கையில் மண்ணெண்ணெய் கொண்டு செல்லுங்கள்; ஆட்சியர் அலுவலகத்துக்குள் வைத்து மண்ணெண்னைய உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுங்கள். அப்போதுதான், வேலை நடக்கும்' என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு தான், இதுபோன்று நடந்து கொண்டேன் என மூதாட்டி வள்ளியம்மை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மூதாட்டியை தற்கொலைக்கு தூண்டிய பெண் யார்? என போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்.
அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தங்கம்(43) என்ற பெண், வள்ளியம்மையை தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இவர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலையைப் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் தங்கத்தின் மீது தற்கொலைக்கு தூண்டுதல் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்க அசிங்கமாக திட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி!