திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 10ஆயிரம் கோடி ரூபாய்வரை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது, இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஜனநாயகப் பூர்வமானது அல்லது எனவும் ஜனநாயகத்திற்கு விரோதமாக அராஜகமாக முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த தேர்தல் எனவும் தெரிவித்தார்.
மேலும், இதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து பணப்பட்டுவாடா குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார். வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என சென்னையில் அடையாள உண்ணாவிரதம் நடத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று ஜக்கி வாசுதேவ் வலியுறுத்திவரும் கருத்தையே கிருஷ்ணசாமியும் வலியுறுத்துகிறார்.
"கர்நாடக மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் மிகப்பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன. அந்த கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் யாரிடம் இருக்கின்றன என்ற தகவலே இல்லை. அதன்மூலம் கிடைக்கும் வருமானமும் யாருக்குச் செல்கிறது என்றும் தெரியவில்லை. எனவே, இந்து அறநிலையத்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத்தாக ஜக்கி வாசுதேவ் மாற முயற்சி - பெ.மணியரசன் குற்றச்சாட்டு