திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேற்று மாலை 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
ஏற்கெனவே அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், திடீரென 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ஆற்றின் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கரையோர பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு முகாமில் தங்கவைத்து வருகின்றனர்.
மீட்புப்பணிக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் தலா 25 பேர் கொண்ட குழுவினர் இன்று (ஜன.13) காலை திருநெல்வேலி வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பிறகு நெல்லை விக்ரமசிங்கபுரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் மீட்பு பணிக்காக பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 227 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.