கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் கூடங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டது. இது போன்று கோயில் விழாக்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர் தங்களது தொழிலை இழந்து தவித்து வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் நாதஸ்வரம், நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, கரகாட்டம், தாரை தப்பட்டை கலைஞர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொழில் இல்லாவிட்டாலும் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் சீசன் காலங்களில், திருமணம், கோயில் திருவிழாக்கள் ஆகியவை அதிக அளவில் நடக்கும்.
இதை வைத்து வாழ்வாதாரத்தை நடத்தி வந்த நிலையில், தற்போது கோயில் விழாக்கள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்து வருவதாலும் தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன.
![ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கிராமிய பெண் கலைஞர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7302370_tki_mk.jpg)
மேலும், 50 நாட்களுக்கு மேலாக தொழில் இன்றி தவித்து வருவதாக தெரிவிக்கும் அவர்கள் தென்மண்டல அனைத்து கலை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை தகுந்த இடைவெளியுடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வில்லிசைத்து, கரகம் ஆடி மேளதாளம் முழங்க பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிவைத்த திருவாரூர் விவசாயிகள்!