திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர், துரை. இவர் பல ஆண்டுகளாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். தற்போது சில மாதங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டே, வைகோ திருநெல்வேலி பகுதிக்கு வரும்போது மட்டும் அவருக்கு கார் ஓட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் துரை, திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் உள்ள அறையில் முகத்தில் காயங்களுடன் மயக்க நிலையில் சுயநினைவின்றி இருப்பதாக அவரது மகளுக்கு, அந்த தோட்டத்தின் அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, துரையின் மகள் மற்றும் மருமகன் அங்கு வந்து அவரை மீட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில் துரை, அவரது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இட்டேரி பகுதியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் மது அருந்தியதாகத் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து துரை மது அருந்தும்போது தவறி விழுந்து முகத்தில் அடிபட்டதில் உயிரிழந்திருக்கலாமா அல்லது மது போதையில் நண்பர்களோடு தகராறு ஏற்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் துரையோடு மது அருந்திய இரு நண்பர்களும் பயத்தில் அங்கிருந்து தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் தற்போது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் துரையின் உடல், உடற்கூறு ஆய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை முடிவிலும், உடற்கூறு ஆய்வு அறிக்கை அடிப்படையிலுமே உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி மோசடி; 'ஒரு நாள் விடுமுறை' என ஒட்டிவிட்டு எஸ்கேப்பான பலே கில்லாடி!