திருநெல்வேலி: ரஷ்யாவிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக நேற்று இரவு 10 மணிக்கு வந்தடைந்தன.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் அணு உலையின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்து அடைந்தது. அதை மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவல்துறை இணைந்து மிகவும் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் கூடன்குளம் வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் இதுவரை மூன்றாவது முறையாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் கூடங்குளத்திற்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தனி விமானம் மூலம் ரஷ்யாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மற்றும் மே 3 ஆம் தேதிகளில் தனி விமான மூலம் மதுரை வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் இறுதிக் கட்டமாக நேற்று யுரோனியம் எரிகோல் பண்டல்கள் 3 டாரஸ் லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் வந்து சேர்ந்தது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகள் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. இரண்டாம் அணு உலையில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி மின் உற்பத்தியை தொடங்கி உற்பத்தி செய்து வருகிறது.
இந்த அணு உலைகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் எரி பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவைகள் அனைத்துமே ரஷ்யா அரசுத்துறை நிறுவனமான ரோஸாட்டம் 60 ஆண்டுகள் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வழங்குவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஒரு அணு உலையில் 163 செறியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல் பண்டல்கள் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இவைகள் ஒவ்வொரு ஆண்டும் 50 எரியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்களாக மாற்றப்பட்டு புதிய செறியூட்டப்பட்ட யுரேனியம் புதியதாக வைக்கப்படும். அது போல இந்த ஆண்டும் இரண்டாம் அணு உலையில் எரிகோல்கள் மாற்றும் வருடாந்தர பராமரிப்பு பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதற்கான எரிபொருள்கள் தான் தற்போது மூன்று தவணையாக 43 செறியூட்டப்பட்ட யுரேனியம் பண்டல்கள் கூடங்குளம் வந்து சேர்ந்துள்ளது.
இதனையடுத்து செறியூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சர்வதேச அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் இணைய தள கண்காணிப்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாக்கப்படும். மேலும் ஒவ்வொரு எரிபொருளும் சுமார் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. இவைகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.