திருநெல்வேலி: பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் பிரபு (35). திருநங்கையான இவர் நேற்று (டிச.17) அதிகாலை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருமாள்புரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரபு கூறும்போது, “நான் திருநங்கையாக மாறி யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று, அங்கு வரும் வாகனங்களில் பணம் வசூல் செய்வேன். இந்த நிலையில் 16ஆம் தேதி டோல்கேட் பகுதியில் நின்றுகொண்டிருக்கும்போது லாரியில் வந்த இரண்டு பேர் என்னை அழைத்தனர்.
நான் லாரியில் ஏறி இறங்கும்போது ரூபாய் 11 ஆயிரத்தைக் காணவில்லை, பணத்தை எடுத்தால் கொடுத்து விடு என்று அவர்கள் மிரட்டியதோடு என்னைத் தாக்கினர். நான் சத்தம் போட்டதால் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டியார்பட்டி மலையில் வைத்து வண்டியில் உள்ள சுத்தியலால், என் நெற்றியில் அடித்து ஊமைக்காயம் ஏற்படுத்தி இறக்கி விட்டுச்சென்றனர். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது” என்றார்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிரபு சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், லாரியில் வந்த இருவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை துண்டாக வெட்டிய கணவன்.. ஜார்க்கண்டில் கொடூரம்..