திருநெல்வேலி: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 42 ஆயிரத்து 20 கோயிகள் உள்ளன. இந்த நிலையில், இக்கோயில்களில் உள்ள அரிய பொருட்கள் மற்றும் அரிய ஓலை சுவடிகள் திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக, சென்னை உலக தமிழாராய்ச்சி சுவடிகள் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் அரிய ஓலைச் சுவடிகளையும், செப்புப்பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்து பாதுகாக்கவும், அதை நூலாக்கம் செய்யவும் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தமிழகத்தில் இதுவரை 232 கோயில்களில் கள ஆய்வு செய்துள்ளனர். அதன் வாயிலாக, 20 செப்புப்பட்டயங்கள் அடையாளம் கண்டு மின்படியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சு.தாமரைப்பாண்டியன் தலைமையிலான, சுவடியியலாளர்கள் இரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து கோயிலில் செப்புப்பட்டயங்கள் மற்றும் செப்பேடுகள் இருப்பதை கண்டறிந்தனர்.
அதில், சேரகுல ராம பாண்டியன் வழங்கிய தேவதானம், ஜெகவீர ராம பாண்டிய கட்டபொம்மன் வழங்கிய தர்ம சாசனம், ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம், விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம், இரங்க கிருஷ்ணமுத்துவீரப்ப நாயக்கர் அளித்த கொடை, லாலுகான் சாய்பு பெயரில் வழங்கப்பட்ட தானம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அதன் தொடர்ச்சியாக, நெல்லையப்பர் கோயில் பாதுகாத்து வந்த 10 செப்புப்பட்டயங்கள் ஆய்வு நிலையில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோயிலில், 200 ஆண்டுகள் பழமையான அரிய ஓலை சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், சைவ சன்னியாசி விஜயம், ஸ்ரீசக்ர பூஜை உள்ளிட்ட 13 ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையும் படிங்க: சிறுபான்மை கல்வி நிலையங்கள் கல்வித்துறை அனுமதி பெற்றே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: நீதிமன்றம்
அதுமட்டுமல்லாமல், திருஞானசம்பந்தர் எழுதிய முதல் மூன்று திருமறைகள் அடங்கிய தேவாரப் பாடல்களுக்கான ஓலைச்சுவடிகளும் கிடைத்துள்ளது. இதில், அவர் எழுதிய தோடுடைய செவியன் என்ற பாடல் முதல் ஏட்டில் உள்ளது. மேலும், 281 ஏடுகள் உள்ள இந்த ஓலை சுவடிகள், சுமார் 200 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த ஓலை சுவடிகள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
நல்ல நிலையில் உள்ள இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் தூய்மை செய்து நூலாக மாற்றவும், டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆய்த்த பணியில் மும்முரமாக இந்து சமய அறநிலை துறையின் ஓலை சுவடிகள் நூலாக்க திட்டப்பணிகள் குழு ஈடுப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் பழமையான 8 செப்புப் பட்டயங்கள், 2 செப்பேடுகள் கண்டுபிடிப்பு!