திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினர். முதியவர்களான இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த போது முகமூடி அணிந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த சண்முகவேலை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் தாக்கினர். இதில் நிலை குலைந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவத்தில் தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் பார்வையிட்டு, அவ்விருவரின் வீரதீரச் செயலைப் பாராட்டினார். மேலும் அந்த தம்பதிகளுக்கு வீரதீர செயலுக்கான விருதும் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
நாடுமுழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் பல நாட்களாக துப்பு கிடைக்காமல் கிடந்தது. சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை திணறியது. தற்போது அந்த வழக்கில் பாலமுருகன் (30), பெருமாள் (51) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலமுருகன் கீழகடையத்தைச் சேர்ந்தவர். பெருமாள் சவலப்பேரியைச் சேர்ந்தவர். இருவரும் இரு நாட்களாக வீட்டை பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்டு செந்தாமரையின் 35 கிராம் தாலி சங்கிலியை பறித்துச்சென்றுள்ளனர். திரும்பும் வழியில் ஒரு பீடி சுற்றும் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். பாலமுருகன் மீது 38 வழக்குகளும், பெருமாள் மீது 8 வழக்குகளும் உள்ளன என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: