சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் 83ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்திலுள்ள வ.உ.சி மணி மண்டபத்தில் முழு உருவச் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அமமுகவை கட்சியாக பதிவதற்கான பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகும். உள்ளாட்சித் தேர்தலில் அமமுக நிச்சயம் போட்டியிடும். நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் சுயேட்சையாகவாவது போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் கருத்தாக உள்ளது. எதிரிகளை வீழ்த்தி உள்ளாட்சியில் வெற்றி பெறுவது அமமுகவின் கடமையாகும்.
அதிமுக மன்னாரன் கம்பெனியாக உள்ளது. சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு கடைசியாக அதில் ஒருவர் இணைய உள்ளார் (புகழேந்தி) எனவும் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியால் மமதையில் உள்ளனர். கடந்த கால வரலாற்றை நான்கு காலில் வந்து பதவியை பெற்றதை மறந்து உழைப்பால் பதவியைப் பெற்றது போல் பேசுகின்றனர். வரும் பொதுத் தேர்தலோடு எடப்பாடி கம்பெனியினர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை எப்போ வெளியாகப்போகுது தெரியுமா?