திருநெல்வேலி: ராதாபுரம் யூனியனில் நேற்று (அக்.21) திமுக சேர்மன் சௌமியா ஜெகதீஷ் தலைமையில் நடந்த சாதாரண கூட்டத்தில் திமுக கவுன்சிலர் பிரேமா என்பவர் கொண்டு வந்த 3 தீர்மானங்களைக் கொண்டு வந்ததாகவும் அவற்றை திமுக சேர்மன் நிராகரித்தாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கவுன்சிலர்கள் பிரேமா மற்றும் பரிமளம் கருணாநிதி, அனிதா ஸ்டெல்லா ஆகியோர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது கூட்ட அறைக்குள் வந்த திமுக சேர்மன் சௌமியாவின் அண்ணன் மகன் நிதிஷ் என்பவர் ராதாபுரம் கவுன்சிலர் பரிமளம் கருணாநிதியின் தொடையிலும் கையிலும் ஏறி மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பரிமளம் கருணாநிதி கேட்டபோது, வழியில் உட்கார்ந்து இருந்தால் அப்படி தான் செய்வேன் என சேர்மன் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து கவுன்சிலர்கள் பிரேமா, பரிமளம் கருணாநிதி, அனிதா ஸ்டெல்லா ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், தங்களது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கண்ணீருடன் கூறியுள்ளனர். மேலும் சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட முக்கிய பதவியில் பெண்கள் இருந்தும் ராதாபுரம் யூனியனில் பெண்களுக்கு மரியாதை என்பது இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணி என்ன? நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற, பல்வேறு பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் கூட திமுக கவுன்சிலர்களே மேயர் சேர்மன் போன்ற உயர் பதவியில் இருப்பவர்களை, எதிர்க்கும் சூழல் நிலவி வருகிறது. இதன் பின்னணியில் அரசியல் சதுரங்க ஆட்டம் இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. குறிப்பாக, தற்போது ராதாபுரத்தில் நடைபெற்ற பிரச்சனையின் பின்னணியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் தற்போதைய சபாநாயகர் அப்பாவு ஆகியோர் இடையே நிலவும் அரசியல் போட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
ராதாபுரம் யூனியன் சேர்மன் சௌமியாவின் கணவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தான் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வைக்கிறார். மேலும், சபாநாயகர் அப்பாவுக்கு விஎஸ்ஆர் ஜெகதீஷ் வலதுகரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சபாநாயகர் மீதுள்ள கோபத்தில் விஎஸ்ஆர் ஜெகதீஷை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முன்னாள் சபாநாயகர் ஆடையப்பன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ராதாபுரம் யூனியனில் உள்ள சில கவுன்சிலர்களை, தனது பக்கம் வைத்துக்கொண்டு அதன்படி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தூண்டுதலின் பேரில்தான் நேற்று பரிமளா கருணாநிதி உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் பிரச்சனைக்குரிய தீர்மானத்தை கொண்டு வந்ததாகவும் செளமியா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: சிவகங்கை சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிக்கு முதலமைச்சர் இரங்கல், நிவாரணம் அறிவிப்பு