திருநெல்வேலி: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்றைய முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்புகளைப் பரிமாறி உற்சாகமாக கொண்டாடினர்.
தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு மிக முக்கியமான இடத்தைப் பெற்றது. அதே வேளையில், பட்டாசு வெடித்ததன் காரணமாக திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பிரதான வீதிகளில் வழக்கம்போல் பட்டாசுக் கழிவுகள் மற்றும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.
நெல்லையின் பிரதான வீதிகளில் வீட்டின் முன்பு குவியல் குவியலாக பட்டாசுக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது. அதே போன்று, வீதிகள் முழுமைக்கும் பட்டாசுக் கழிவுகள் நிறைந்து காட்சியளிக்கிறது. மேலும், மாநகராட்சியின் ஒட்டுமொத்த பகுதிகளிலும் டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் நெல்லை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசுக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி ஒருபுறம் நடைபெற்று வரும் அதே வேளையில், திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் காற்று மாசு இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில், மாநகரப் பகுதியில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டு 153 என்ற தரக் குறியீட்டிற்கு வந்துள்ளது.
காற்று மாசுபாடு: 200-ஐக் கடந்தால் சுவாசிப்பதற்கு தரமற்ற காற்று என்ற நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இயல்பை விட காற்று மாசு அதிகரித்து 153 ஆக இருக்கிறது என்று திருநெல்வேலி மாநகராட்சியின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அனுமதிக்கப்படாத நேரத்தில் அதிக சத்தத்துடன் வெடி வெடித்ததாக நெல்லை மாநகர காவல் நிலையங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பாளையங்கோட்டையில் மட்டும் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: world diabetes day 2023: சர்க்கரை நோய் ஒரு தண்டனை அல்ல.. வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே போதும்.!