நெல்லை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்டம் முழுதும் பணிபுரியும் காவலர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கூட்டம் நடத்தி சிறப்பாக பணிபுரிந்த காவல் அலுவலர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். அதேபோல் காவலர்களின் உடல்நலம் மற்றும் மன நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினமும் காலையில் யோகா, கராத்தே உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் 27 பேரை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனித்தனியாக தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாவட்டம் முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களின் பட்டியலை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், அவர்களை தொலைபேசி மூலமாக அழைத்து தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதே போல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முழு அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.