திருநெல்வேலி: அடர்ந்த வனத்தில் ஆதரவில்லாமல் தவிக்கும் மூதாட்டியின் ஓய்வூதியத்தை கொடுக்க மாதம்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் சவாலான மலை பயணம் மேற்கொள்ளும் தபால் ஊழியர் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அடுத்த காரையாறு அணைப் பகுதியை சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே காணி இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காகவும், அங்குள்ள அரசு அலுவலகம் சார்ந்த விஷயங்களுக்காகவும் இப்பகுதியில் பாபநாசம் கிளை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு காணி இனத்தைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (55) என்பவர் தபால் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
தினந்தோறும் வழக்கமான தபால்களை பிரித்துப் பார்க்கும் கிறிஸ்துராஜாவுக்கு அன்று இஞ்சிக்குழிக்கு அனுப்ப வேண்டிய ஒரு மணியார்டர் வந்திருந்தது. காரையார் அணையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில்; மலைப்பகுதியில் உள்ள இஞ்சிக்குழி பகுதியில் வசித்து வரும் குட்டியம்மாள் என்ற மூதாட்டியின் பென்சன் தொகைக்கான 1,000 ரூபாய் மணியார்டர்தான் அது.
பொதுவாக தமிழ்நாட்டில் 50 வயதை கடந்த பெண்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், குட்டியம்மாள் தனக்கான மாத ஓய்வூதியத்தை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 100 வயதை கடந்த குட்டியம்மாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இஞ்சிக்குழி வனப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்களின் ஆதரவு இல்லாமல் குடில் வீட்டில் தனியாக வசிக்கிறார்.
மலைப் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சில மாதங்களுக்கு முன்பு இஞ்சிக்குழி பகுதிக்கு சென்றிருந்தார். அரசாங்க அதிகாரி அங்கு வந்திருப்பதை அறிந்த மூதாட்டி குட்டியம்மாள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.
குட்டியம்மாளின் வேதனையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அரசின் மாத ஓய்வூதியம் 1,000 ரூபாய் விரைவாக கிடைக்க வழிவகை செய்தார். அந்த மணியார்டர்தான் கிறிஸ்துராஜாவின் கையில் கிடைத்தது.
இஞ்சிக்குழி செல்வதில் சிரமம் இருந்தாலும், குட்டியம்மாளுக்காக மாதம்தோறும் மலை ஏற கிறிஸ்துராஜா கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. தானும் ஒரு காணி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவாலான மலை பயணத்தை மேற்கொண்டு மாதம்தோறும் குட்டியம்மாளுக்கு பென்சன் தொகையை கொண்டு செல்கிறார். இதற்காக அவர் ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டியுள்ளது.
எனவே அலுவலக வேலை நாட்களில் செல்ல முடியாது என்பதால் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தனது பயணத்தை திட்டமிடுகிறார். வனத்துறை அதிகாரிகளும் கிறிஸ்துராஜாவுக்கு உதவியாக அவர் காரையார் அணையை கடந்து செல்ல படகு உதவி செய்கின்றனர். ஆனால், படகுக்கான டீசல் செலவை கிறிஸ்துராஜா தன் சொந்த பணத்தில் மேற்கொள்கிறார். 1,000 ரூபாய் மணியார்டரை கொடுக்க மாதம்தோறும் கிட்டத்தட்ட 500 ரூபாய் செலவு செய்கிறார் கிறிஸ்துராஜா.
குட்டியம்மாளுக்கு பென்சன் வழங்க செல்லும் நாளில் கிறிஸ்துராஜா அதிகாலையில் எழுந்து காலை, மதியம் இரண்டு வேளை உணவை கட்டிக்கொண்டு பையுடன் தனது பயணத்தை தொடங்குகிறார். தபால் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரையார் அணையை அடைந்து. அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரம் படகில் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து மிக சவாலான மலையைக் கடந்து செல்கிறார். அங்கிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டிற்குள் நடந்து சென்று இஞ்சிக்குழியை அடைகிறார்.
வனவிலங்குகள் எந்த நேரமும் தன்னை தாக்கலாம் என்ற அச்ச உணர்வோடுதான் அவர் பயணிக்கிறார். குட்டியம்மாளின் வேண்டுகோளுக்கு இணங்க கிறிஸ்துராஜா தனது காணி இனத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை மாதம்தோறும் தனக்கு உதவியாக உடன் அழைத்துச் செல்கிறார். இருவரும் செல்லும் வழியில் அமர்ந்து உணவு அருந்துகின்றனர். விலங்குகளிடம் இருந்து தப்பித்தால் கூட அட்டை பூச்சிகளால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.
கிறிஸ்துராஜாவை கண்டதும் மூதாட்டி குட்டியம்மாவுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. தனது பென்சன் தொகையை வாங்கிக் கொண்டு காபி தண்ணி ஏதாச்சும் குடிக்கிரியா என்று பாசத்தோடு நலம் விசாரிக்கிறார். ஆனால், எந்த அடிப்படை வசதியும் இல்லா பகுதியில் வாழ்ந்து வரும் குட்டியம்மாளிடம் பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது என்பதில் கிறிஸ்துராஜா உறுதியாக உள்ளார்.
இதுகுறித்து கிறிஸ்துராஜா நம்மிடம் கூறுகையில், குட்டியம்மாளுக்கு பென்சன் தொகை எனது மூலமாக சென்றடைவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது அலுவலகத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஆபத்தான வழியில் மலைப் பயணம் மேற்கொண்டு குட்டியம்மாளை சந்திப்பதில் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது, வருத்தம் ஏதுமில்லை.
எனது குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நான் பணி ஓய்வு பெறும் வரை குட்டியம்மாளின் பென்சன் தொகையை கொண்டு சேர்க்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.
மூன்று வேளையும் கஞ்சி மட்டுமே அருந்திவரும் குட்டியம்மாள், ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தைக் கொண்டு மாதம்தோறும் அரிசி வாங்கி கொள்வேன் என்று புன்னகையோடு கூறுகிறார்.
இதுகுறித்து மூதாட்டி குட்டியம்மாள் நம்மிடம் பேசுகையில், எனது தாத்தா காலத்தில் இருந்து இந்தக் காட்டு பகுதியில் வசித்து வருகிறோம். இந்த காட்டில் வசித்தால்தான் எனக்கு நிம்மதி; ஊருக்குள்ளே என்னால் வசிக்க முடியாது. எனக்கு தகரத்தால் வீடு கட்டிக் கொடுக்க அரசு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தபால் துறை சரிவை சந்தித்துவரும் இந்த வேளையில், ஒரே ஒரு மணியார்டருக்காக மாதம்தோறும் 30 கிலோ மீட்டர் தூரம் மலைப் பயணம் மேற்கொண்டு, தனது சொந்த பணத்தை செலவிடும் தபால் ஊழியர் கிறிஸ்துராஜாவின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டம்!