திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் முன்னாள் அதிமுக கவுன்சிலரின் மகன் ஆவார். இவர் சேரன்மாதேவியில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் நேற்று மாலை வீரவநல்லூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது இவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 2018ஆம் ஜனவரி மாதம் இவரது கடை முன்பாக வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைச் சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு காரணம் உண்டா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.