திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடலி விளையில் பிரேசில் நாட்டைச் சார்ந்த வெக் (WEG) என்ற காற்றாலை நிறுவனம் இந்தியாவிலேயே அதிக மின் உற்பத்தி கொண்ட 4.2 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலையை அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. இதில் பொது மேலாளராகப் பிரேசில் நாட்டைச் சார்ந்த கார்லஸ் ஹெர்பர்ட் பாராஸ்(CARLAS HERBERT BARASS) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதனை, கடந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி மத்திய அரசின் எரிசக்தித் துறை ரசாயன இணை அமைச்சர் பகவந்த் குப்தா இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்பு கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி முதல் இதன் பணிகள் முடிந்து மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.
இந்த காற்றாலை பண்ணையில் பிரேசில் நாட்டைச் சார்ந்த கார்லஸ் ஹெர்பட் பாரோஸ் என்பவர் பொது மேலாளராக அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சில பணிகளைச் செய்துள்ளார். ஆனால், அவர் சரியாக செய்யாததினால் அவரது ஒப்பந்தத்தை பிரேசில் நாட்டின் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அவரது மகன் பாலாஜி ஆகியோரின் தூண்டுதல் பேரில் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் என்பவர் அடியாட்களுடன் காற்றாலை அமைந்து இருக்கும் இடத்திற்குச் சென்று அங்குள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிலரை தாக்கி உள்ளனர். அப்பொழுது அலுவலகத்திலிருந்த பொது மேலாளர் பிரேசில் நாட்டைச் சார்ந்த சார்லஸ் ஹெர்பர்ட் பரோஸ் என்பவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் இங்கு தொழில் செய்யக்கூடாது எனவும் அவரை மிரட்டி உள்ளனர். இதனை அடுத்து அவர் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் பாலகிருஷ்ணனின் மகன் பாலாஜி, பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் மார்த்தாண்டம் ஆகியோர் மீது ஏழு பிரிவுகளில் பணகுடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுத் தொழில் முதலீட்டாளர் ஒருவரை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் தாக்கியது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை