திருநெல்வேலி: நெல்லை டவுண் பகுதியின் காவல் துறை உதவி ஆணையராக இருப்பவர், சுப்பையா. இவர் நேற்று (ஆகஸ்ட் 02) என்று நெல்லை டவுணில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து, திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்கு செல்வதற்காக நெல்லையப்பர் கோவிலில் இருந்து டவுண் ஆர்ச் வரை உள்ள ஒரு வழி சாலையில், எதிர் திசையில் சென்றுள்ளார்.
அப்பொழுது திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நெல்லை டவுணை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் சாலை விதிகளை மதிக்காமல் வந்த உதவி காவல் ஆணையாளரின் வாகனத்தை கவனித்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருக்கும் செல்லத்துரை என்பவரை அழைத்து, விதிமீறி வந்த உதவி ஆணையர் வந்த காவல்துறை வாகனத்திற்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறை ஆணையாளர் பெயரில் இருக்கும் அந்த வாகனத்திற்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபராதத் தொகையும் செலுத்தப்பட்டது. மேலும் விதி மீறிய சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் சுப்பையா மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது, சட்ட விதிகளுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரியே விதியை மீறி வாகனத்தை இயக்கியதும், அதை கவனித்த காவல் ஆணையர் சற்றும் தயக்கம் இன்றி உடனடியாக அபராத நடவடிக்கையை கையாண்டதும் பலரது புருவத்தை உயர்த்தியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் நெல்லை மாநகர காவல் துறை ஆணையராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார். குறிப்பாக இவர் பொறுப்பேற்ற சில நாட்களில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதேபோல் நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க குழு அமைத்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது போன்ற அதிரடி நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரரான காவல் ஆணையர் ராஜேந்திரன் தனது துறையைச் சேர்ந்த சக அதிகாரி தவறு செய்தபோதும், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பிரபல சொல்லாடலுக்கு ஏற்ப போக்குவரத்து விதிகளை மீறிய உதவி ஆணையருக்கு அபராதம் விதித்த சம்பவம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: SPECIAL - அணைக்காக உயிர்த்தியாகம் செய்த சிறுமி - 1000 ஆண்டுகளாக கொண்டாடப்படும் நல்லம்மாள்!