திருநெல்வேலி: அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று (டிச.16) முதல் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் முழுவதிலும் நேற்று (டிச.16) இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ச்சியாக மழை நீடித்து வருகிறது. மேலும், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அவ்வப்போது கனமழையும் கொட்டி வருவதால், தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற மாவட்டத்தின் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு நேற்று இரவு சுமார் 800 கன அடி மட்டுமே தண்ணீர் வந்த நிலையில், இன்று (டிச.17) காலை முதல் நீடித்து வரும் கனமழையால், பிற்பகல் 2 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல், மாஞ்சோலை மலைப்பகுதியில் கொட்டித் தீர்க்கும் கனமழையால், மணிமுத்தாறு அணைக்கும் தண்ணீர் வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை, ஏற்கனவே 85 சதவீதம் நிரம்பிய நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் எனத் தெரிகிறது. எனவே பாதுகாப்பு கருதி பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.17) காலை பாபநாசம் அணையிலிருந்து வெறும் மூவாயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், தற்போது வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல், மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோர மக்களுக்கு ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மாஞ்சோலை பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால், மணிமுத்தாறு அருவியே தெரியாத அளவிற்குத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதற்கிடையில், நெல்லை மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகப் பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்திருப்பதால், அப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலணி போன்ற பகுதிகளிலும் வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் மழை நீரை வடிய வைப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் திசையன்விளை பகுதியில் இன்று அதிகாலை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழையால், உடன்குடி சாலை நேருஜி கலையரங்கம் அருகே சாலையில் ஆறு போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், இந்த தண்ணீரில் மிதந்தபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அதேபோல், நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள சாலைகளில் இடுப்பளவிற்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மழை அளவைப் பொறுத்தவரை இன்று காலை முதல் பிற்பகல் 12 மணி வரை நெல்லையில் அதிகபட்சம் நம்பியாறு அணைப் பகுதியில் 165 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்க்கும் இந்த கனமழையால், மக்களின் இயல்பு வழக்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!