திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ள ராஜபுதூர் பிரிவு சாலையில் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி நோக்கி, அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அப்போது சாலையைக் கடக்க, அப்பகுதி முதியவர் முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே அவர் மீது மோதாமல் இருப்பதற்காகத் தடுப்புச் சுவரில், மோதி 10 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டு, நான்கு வழிச்சாலையின் கீழ்புறம் உள்ள சாலையில் போய் அந்த லாரி விழுந்தது.
நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் எதிர் திசையில் இருந்து, எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்த மக்கள் மீட்டு, நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காட்சிகள் காணொலியாக அந்தப் பகுதியில் இருந்த கடையின் சிசிடிவியில் பதிவானது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.