திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள்கள் மட்டும் செல்லும் வகையில் பிரத்யேக சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு மாநகராட்சிகள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (அக்.20) மாநகராட்சி, தனியார் அமைப்புகள் இணைந்து ’சைக்கிள் சவால்’ என்ற பெயரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தினர். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் நெல்லை மாநகரக் காவல் துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் காவல் துணை ஆணையர் சரவணன், உதவி ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மாணவர்களுடன் சைக்கிளில் பயணம் செய்தனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் கூறுகையில், “மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். சைக்கிள்கள் மட்டும் செல்லும் வகையில் பிரத்யேக சாலைகள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி இன்று சைக்கிள் சவால் என்ற பெயரில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறுகிறது. இன்னும் நான்கு மாதங்களில் இந்த பிரத்தியேக சாலைப் பணிகள் முடிவடையும்” என்றார்.
இதையும் படிங்க...விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்: சமூக வலைதளத்தில் எழும் கண்டங்கள்!